Monday, December 19, 2005

பனித்துளி

 
 Posted by Picasa

மிகச்சிறந்த கவிதைகள்
எழுதப்படுவதில்லை
உணரப்படுகின்றன
உனைப்போல.
----------------------

தவிக்கிறது மனது
இலையின் நுனியில்
பனித்துளி
----------------------

உன் பார்வைகள்
குத்தி பார்க்கின்றன
என் காதல்
உணர்ச்சிகளை
---------------------
உன்
கண்களில் தெரிகிறது
என் வேதனையின் அளவு.
-------------------------
என்றோ உன்
கண்ணீர் துளிகள் நனைத்த
சட்டை
ஈரமாகவே இருக்கிறது
இன்றும்.
-------------------

Thursday, December 15, 2005

சத்தமில்லாமல் வாசிக்கவும்

 Posted by Picasa

தனிமை..
தனிமை..
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை

நான் யார்?
அவசியமில்லாமல் போகிறது
முதன்முதலாக

நூற்றாண்டுகளின்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
இந்த மழைக்காக

அறிந்தோ அறியாமலோ
படிந்து போன
நூற்றாண்டுகளின் கரையை
கழுவதற்காக
காத்திருக்கிறேன்

எப்போது நிகழ்ந்திருக்கும்?
வெற்றிக்காண காரணம் என்ன?
இன்று வரை அறியமுடியவில்லை
பண்பாட்டின் மீதான
படையெடுப்பு

ஆணாதிக்கத்தின்
அந்த வெற்றியில்தான்
நாட்டப்பட்டிருக்க வேண்டும்
கற்பின் கொடிகம்பம்
யோனியில்

தன் இருப்பை
உணர்த்திக் கொள்வதற்காக
திடிரென்று
நியமித்துக்கொண்டிருக்கிறது
பண்பாட்டு காவலர்களை

நான் நடந்துகொள்ளவேண்டிய
விதம்பற்றி
விவரணப் படம் எடுக்கப்படுகிறது
கலை இயக்குநரால்
கலைக்காகவே
கலைஞர்களை மட்டுமே நம்பி.

இரத்தங்களை சொட்டும்
வீச்சரிவாள்கள்
அது என் யோனியின் இரத்தம்
என்பதில் பெருமிதம் கொள்கின்றன..

நாளை மருத்துவர்களின்
முயற்சியால் இப்படி கூட நடக்கலாம்
"இலவச யோனி தைப்பு முகாம்"
அன்றைக்கும் கூட சன்னமாய் தான்
ஒலிக்கப்போகிறது
உங்கள் ஆண்குறிகளை கூட
வெட்டிக் கொள்ளலாம் எனும் குரல்.

பத்தவச்ச வத்திக்குச்சி
பக்கத்திலே குளிர்காய்கிறது..
சூரியனுக்கு முன் இதெல்லாம்...
என்றபடி எழுதுகிறது
"எனது அருமை உடன்பிறப்புக்களே".

அப்பாடா
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
யாருமில்லை
நான் யார் என்பது
தேவையும் இல்லை.

Tuesday, December 13, 2005

பிரிவு

மறந்திராத
stay in touch
i will miss u
இப்படி பிரிவுக்கான
எத்தனையோ வரிகளில்
ஒன்றுகூட உச்சரிக்கப்படாமல்
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு

நிதர்சனம் உடைத்த கண்ணாடியில்
முகம் பார்த்து
தன்னைத்தானே
அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது
காதல்

உன் பெயரை
சப்தமில்லாமல் உரக்க அழைத்தில்
வலிக்கிறது மனது
வலியினூடே ரகசியமாய்
கேட்க நினைக்கிறது
"என் நினைவுகள் உனக்கு வருமா??"

இயல்பாய்....
பிரிந்து போனாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு
பிரிவதற்கான கடைசி நேரங்களில்
என் கண்ணில் நிலைகுத்தி நின்ற
உன் பார்வை
'புரிகிறது' என்று சொன்னதாய்
புரிந்துகொள்கிறது மனது.

நீ இல்லாத போதும்
நினைவுகளில் உன் இருப்பை
கண்காணித்துக் கொண்டே இருக்கிறது
உன் கண்கள்

இன்று இல்லாவிட்டாலும்
என்றைக்காவது சொல்லிப்போ..
புரிந்து கொண்டதாய்
இல்லையென்றாலும்
தெரிந்து கொண்டதாய்
என் காதலை

- பிரேம்