Wednesday, July 27, 2005

கவிதையும் போராட்டமும்

நிராகரித்து விடுங்கள்
என் கவிதையை
அழக்கூட முடியாத
ஆற்றாமையின் வெளிப்பாடுதானே
அது!!??

கவிதை மட்டும்தான்
காயப்பட்டுப் போகிறது
என் கண்ணீரின்
ஈரத்தில்....

அதன் காயங்கள்
சொல்லிப்போகும்
நிராகரிப்பின்
வேதனையை

கவிதையும் போராட்டமும்
ஒன்றுதான்
போராடுபவர்களுக்கு
புரியும்
அதன் நியாய அநியாயங்கள்

"வந்தால் மலை போனால்
மயிர்"
என்று சொல்வதற்கு
பணயம் வைக்கப்படுவது
மயிர் அல்ல
உயிர்

அதுசரி
அடுத்தவன் உயிர்
உங்களுக்கு மயிர் தானே!!

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்
மனிதனாக பிறந்தது
உங்கள் குற்றமா என்ன???

ஒடித்துப்போடுங்கள்
உங்கள் தராசின் முட்களை

போதையில் ஆடும் அதன்
ஆட்டத்தின் முடிவை
எதிர்பார்த்தில்லை
போராட்டமும்
என் கவிதையும்.

என் தோழிக்கு சமர்ப்பணம்

கூட்டத்தில் தள்ளி நின்று
தேடுகிறது காதல்
தேடி அலைகிறது நட்பு!!

உன் செல்பேசியின்
மௌனம்
உரக்கச் சொல்லிப்போகிறது!!??
என் அருகாமை
உனக்குத் தேவை என்பதை..

"டேய் எப்படிடா இருக்க"
என்ற வார்த்தைகளின்
இடைவெளி
உணர்த்திப்போகிறது...!!!
நீ என் அழைப்புக்காக
காத்திருந்த நேரத்தை...

"வழியிறான்"
என்று சொல்லாமல்
எத்தனை முறை தவிர்த்தாயோ??
என்னை யாரும் சொல்லிவிடுவார்கள்
என்ற பயத்தில்!!

"நட்புக்காலம்"
வாசித்த பிறகுதான் புரிந்தது
கவனிக்கப்படுகிறோம் நாம்...!!??
நம்மை அறியாமலே..!!!

உனக்கு உணர்த்தப்பட்டபிறகே
தெரிவிக்கப்படுகின்றன
என் கஷ்டங்கள்
நம் நண்பர்களுக்கு!!??

யோசித்திருக்கிறாயா
ஏனென்று??

இனக்கவர்ச்சி என்று
சொல்லிவிட்டு போகலாம்
மற்றவர்கள்

ஆனாலும்
நிறப்பாமலே விட்டுவிடுவோம்
இதற்கான பதிலை!!!

கண்டுபிடித்து விடாமலா
போகப்போகிறார்கள்
தாயிடம் மகனும்
தந்தையிடம் மகளும்
ஒன்றிப்போவது
ஏன் என்று!!

அன்றைக்கு
எழுதிக்கொள்வார்கள்
அவர்களாகவே

எனக்கு பிடித்ததை
அணியச் சொல்கிறது
காதல்
உனக்கெது நன்றாக இருக்கும்
என்று
பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறது
நட்பு ...!!


(தொடரும்....)

தொடர்ந்து கொண்டுதான்
இருக்கும்
உனக்கான என் கவிதையும்.....
நட்பும்....

-பிரேம் குமார்

யார்....? யாருக்காக....!!???

ஏன்
எதற்கு
எப்படி
என்று கேட்டுக்கொண்டே போகலாம்!!
இருந்தாலும் தெளிவாக சொல்லமுடிந்ததில்லை
நம் பிரிவுக்கான காரணத்தை!!!

பல நாட்களாக கண்ணீர் பட்டும்
கரையாமலே இருந்தது
எதிர்பார்ப்புகளினால் ஏற்பட்ட
ஏமாற்றத்தின் கசப்பு....!!!

சந்தோசமோ
துக்கமோ
கவிதையாகவே பார்த்திருக்கின்றன
என் இரவுகள்,
கண்ணீரை.

அன்றைக்கு உனக்காக!!
நீ பார்த்த துளிகள்,
கரையாகவே படிந்துபோனது
என் மனதில்!!

கற்பனைக் கற்கள்,
எதிர்பார்ப்புகளோடு
நட்பையும்
உடைத்துப் போனதை
என்னவென்று சொல்வது!!??

உடைந்த பிம்பங்கள்
உணர்த்திப் போகும்
கண்ணாடிகள் உடைந்துபோனதை
அதைப் போலத்தான்
என் மெளனமும்...!!!

பட்டகாயத்தின் வடுக்களை
பார்க்கமுடியாமல்
முகமுடியே
முகமாகிப்போனது!!!

நீ வாழ்த்து சொல்லியபோது
முகத்தை திருப்பிக் கொண்டிருக்கலாம்
முகம் பார்க்கும் ஆசை
என்னையும் மீறி
என்னையறியாமல் வெளிப்பட்டுப்போகிறது!!

கண்டும்காணாமல் போவதும்
கேட்குமெனத் தெரிந்தே
கோபமாகப் பேசுவதும்
உன் பிரிவின் காயத்தை
மறைக்கத்தானே!!!

இது
கவிதையாகவே இருக்கட்டும்
இல்லை என்றாலும்

கேட்காதீர்கள்
யார்
யாருக்காக எழுதியதென்று!!!??