Tuesday, May 30, 2006

தோழி...

  Posted by Picasa

* என் மனதில்
பதட்டத்தில் நிழல் படிந்திருந்த
ஒரு
அழகான தினத்தில்
நீ அறிமுகப்படுத்தப்பட்டாய்.

* பார்க்காமல் விட்டுவிட்டேன்
ஒருவேளை நடந்திருக்கலாம்
மனதை வருடும் மழையோ
இல்லை
வானில் நட்சத்திரமோ
எதோவொன்று உணர்த்திப்போயிருக்கலாம்
எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை

* என் முகம் சத்தமாகவும்
வார்த்தைகள் ரகசியமாகவும்
சொல்லிப் போகின்றன
என் வலிகளை
உன்னிடம்

* வேதனையின் போது.
சாரலில் எழும்
மண்வாசனை போல்
இதமாய் இருக்கிறது
உன்
நட்பின் வார்த்தைகள்

* என் உள்ளங்கையில்
விழுந்த கண்ணீரில்
தெரிகிறது
உன் நட்பின்
பிம்பம்..

* சந்தோசமாய்
உன் விரல் பிடித்து
சிறுகுழந்தை போல
விளையாடிக்கொண்டே நடக்கிறது
மனது
அருகருகே
நடந்துகொண்டிருக்கிறோம் நாம்

if i leave will u miss me??

* இல்லை என்றால்
நம்பிவிடவும் ஆமாம்
என்றால்
ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்...

ஆனால் தயவு செய்து
பிரியும் போது
கொஞ்சம்
வலிக்காமல் தான்
பிரிந்து போயேன்
பயமாய் இருக்கிறது...

- பிரேம்

Thursday, May 11, 2006

ஆசையின் ஏக்கம்

  Posted by Picasa

அன்புள்ள ..... ,
ஞாபகமிருக்குமென்றே
நினைக்கிறேன்
என் பெயர் உனக்கு..

வழக்கமான தொடக்கம்தான்
இருந்தும் அறிந்தே இருக்கிறேன்
சத்தமாய் உச்சரிக்க சத்தமில்லாமல்
ஏங்கும் உன் மனதை

மழைபெய்து ஓய்ந்த
மாலைநேர தேநீர் போல
இனம்புரியாத இதமாக இருக்கிறது
உன் நினைவுகள்

இருபத்தி இரண்டு வருடங்கள்.

பேருந்து பயணம் போல
கடந்துவிட்டது வாழ்க்கை
இதில் நான்கு வருடங்கள்
உன் தோள் சாய்ந்து...

தெரிந்தும் தெரியாமலும்
தோள்வாங்க நினைத்து
விழுந்து காயப்படுகிறேன்
இப்போதெல்லாம்

காயங்களை நினைத்து
நானே சிரித்துக் கொள்கிறேன்
எல்லோருடன் சேர்ந்து...

ஆனாலும்
இன்னும் நினைவிருக்கிறது
மெதுவாய் புன்னகைத்து
தலையை திருப்பி
நீ
கண்களை துடைத்துக் கொண்டதை

அது எனக்காக
என்று சந்தோசமாய்
இருந்த தருணத்தில் தான்
நடுத்தெருவில்
எனை கதறி அழவிட்டு
கைப்பிடித்து போகப்பட்டாய்

இன்றும்
உதடுகளை புன்னகைக்க விட்டு விட்டு
அழுது புரள்கிறது
மனது

ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அரவணைப்பின்
கதகதப்பில் கேட்கப்படும்
என் வேதனையின் முனங்களுக்காய்..
என் மூச்சுக்காற்று
முனங்கும் முன் வந்துவிடுவாய்
என்றே நினைக்கிறேன்.

இன்றும் அன்புடன்
பிரேம்

Friday, May 05, 2006

சுனாமி சிதறல்கள்

புயலுக்கு பின் அமைதி!!!
கடலுக்கு மட்டும்...!!

------------------------------

இலக்கு நிச்சயமில்லாத பேருந்து,
குளோரின் போடப்பட்ட சாலைகள்,
பாலத்தின் மேல் படகு
முகமிழந்த நாகை துறைமுகம்
பூட்டப்பட்ட வீடுகள்
மாஸ்க் அணிந்த மனிதர்கள்,
தடுப்பூசி வரிசைகள்,
பீடி கேட்கும் பெரியவர்,
நாற்றமடிக்கும் உடல்கள்
இரத்தம் வழியக் காத்திருக்கும் நாய்
சில புதிய மனநல நோயாளிகள்
தமிழ் தெரியாதவர்களின் ஹெலிகாப்டர் விசாரிப்புகள்
தீண்டத்தகாதவளான கடலன்னை
சோற்றுத் தட்டாகிய ரோடுகள்
நகைக்காக ஊனப்படுத்தப்பட்ட சடலங்கள்
கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில்
இந்துக்களின் நிவாரண வண்டி
விச ஊசி கேட்ட சிலபேர்
அழிவின் ஆழம் தெரியாமல் சிரித்த மழலைகள்
தரை மட்டுமே எஞ்சிய வீடுகள்
ஒரே குழியில் 90 பிணங்கள்

போதும் போதும்
இனிமேலும் கேட்காதீர்கள்
நாங்கள் பார்த்தவைகளை

----------------------------------
அழிந்து போன டினோசர்கள்,
தப்பிப் பிழைத்த கோமோசெப்பியன்கள்,
கடலில் கலக்காத யமுனை நதி,
கேட்பாரற்ற பெர்முடாஸ் முக்கோணம்,
நாகப்பாம்பின் தப்பிப் பிழைத்த ஒரு குட்டி,
நாகசாகியில் கரப்பான் பூச்சிகள்,
இன்று கடற்கரை தேரைகள்!!
என்று முடியும்
இயற்கையின்
இந்த ஓரவஞ்சனை?

---------------------------

கடல் துச்சாதனன்
துகிலுறிந்ததால்
உயிரை விட்டாள்
இந்த கலியுக திரெளபதி?

-----------------------------

ஒரு கைக்குழந்தை
கைகளில்லாமல் ஒரு 16 வயது பையன்
சற்றே நிர்வாணம் மறைக்கப்பட்ட
ஒரு ஆணும் பெண்ணும்
இவர்களைத் தாங்கிய
சில சவுக்குக் குச்சிகள்
இன்னும் சில கையுறைகளும்
கந்தல் துணிகளும்
"தீ மூட்டினார்" ஒரு "பாதிரியார்"!!
எங்கே போயின
இந்த சாதியும் மதமும்!?
இறைவனிடம் கேட்பேன்
எனக்கும்
இப்படியொரு தகனம்

-------------------------------
வயித்த நனைக்க
காவிரித் தண்ணி கேட்டோம்
வங்கத் தண்ணி கொடுத்து
நொறையீரல் நெறைத்தாய்......
-----------------------------

சாவுக்குத் தப்பிச்சதால
சாவடில வந்துநிக்கிறோம்
சாப்பட்டுக்கு வழியில்ல
சாவே பரவாயில்ல...

-----------------------------

தாலிய கழட்டி வெச்சி வேண்டிக்கிட்டா
கட்டினவன் வந்துபுட்டேன்
கட்டினவள காணலியே
வாக்கரிசிக்கு வழியிருந்தா
உனக்கு சொல்லிவிடுறேன்
பொணத்தயாவது அனுப்பி வை
வாக்கரிசி நான் போட...!!

---------------------------------

யார் இவர்களுக்குப்
போர்வை கொடுக்க மாட்டேன் என்றது
இப்படி
மண்ணைப் போர்த்தித் தூங்குகிறார்கள்.....

-----------------------

முத்தெடுக்க
கடலுக்குள்ள குதிச்சிருக்கோம்!
இப்ப
எங்க முத்த
கடலுக்குள்ள தொலச்சினிக்கோம்!!
எந்தக்கரையில ஒதுங்கும்னு தெரியலயே
அறடி நெலமாவது கிடைக்குமா புரியலியே!!??

---------------------------

வறுமைக் கோட்டை அழிக்க முடியாமல்
கோட்டிற்கு கீழுள்ளவர்களை
அழித்துப் போனது கடல்!!!

-------------------------------