Friday, May 05, 2006

சுனாமி சிதறல்கள்

புயலுக்கு பின் அமைதி!!!
கடலுக்கு மட்டும்...!!

------------------------------

இலக்கு நிச்சயமில்லாத பேருந்து,
குளோரின் போடப்பட்ட சாலைகள்,
பாலத்தின் மேல் படகு
முகமிழந்த நாகை துறைமுகம்
பூட்டப்பட்ட வீடுகள்
மாஸ்க் அணிந்த மனிதர்கள்,
தடுப்பூசி வரிசைகள்,
பீடி கேட்கும் பெரியவர்,
நாற்றமடிக்கும் உடல்கள்
இரத்தம் வழியக் காத்திருக்கும் நாய்
சில புதிய மனநல நோயாளிகள்
தமிழ் தெரியாதவர்களின் ஹெலிகாப்டர் விசாரிப்புகள்
தீண்டத்தகாதவளான கடலன்னை
சோற்றுத் தட்டாகிய ரோடுகள்
நகைக்காக ஊனப்படுத்தப்பட்ட சடலங்கள்
கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில்
இந்துக்களின் நிவாரண வண்டி
விச ஊசி கேட்ட சிலபேர்
அழிவின் ஆழம் தெரியாமல் சிரித்த மழலைகள்
தரை மட்டுமே எஞ்சிய வீடுகள்
ஒரே குழியில் 90 பிணங்கள்

போதும் போதும்
இனிமேலும் கேட்காதீர்கள்
நாங்கள் பார்த்தவைகளை

----------------------------------
அழிந்து போன டினோசர்கள்,
தப்பிப் பிழைத்த கோமோசெப்பியன்கள்,
கடலில் கலக்காத யமுனை நதி,
கேட்பாரற்ற பெர்முடாஸ் முக்கோணம்,
நாகப்பாம்பின் தப்பிப் பிழைத்த ஒரு குட்டி,
நாகசாகியில் கரப்பான் பூச்சிகள்,
இன்று கடற்கரை தேரைகள்!!
என்று முடியும்
இயற்கையின்
இந்த ஓரவஞ்சனை?

---------------------------

கடல் துச்சாதனன்
துகிலுறிந்ததால்
உயிரை விட்டாள்
இந்த கலியுக திரெளபதி?

-----------------------------

ஒரு கைக்குழந்தை
கைகளில்லாமல் ஒரு 16 வயது பையன்
சற்றே நிர்வாணம் மறைக்கப்பட்ட
ஒரு ஆணும் பெண்ணும்
இவர்களைத் தாங்கிய
சில சவுக்குக் குச்சிகள்
இன்னும் சில கையுறைகளும்
கந்தல் துணிகளும்
"தீ மூட்டினார்" ஒரு "பாதிரியார்"!!
எங்கே போயின
இந்த சாதியும் மதமும்!?
இறைவனிடம் கேட்பேன்
எனக்கும்
இப்படியொரு தகனம்

-------------------------------
வயித்த நனைக்க
காவிரித் தண்ணி கேட்டோம்
வங்கத் தண்ணி கொடுத்து
நொறையீரல் நெறைத்தாய்......
-----------------------------

சாவுக்குத் தப்பிச்சதால
சாவடில வந்துநிக்கிறோம்
சாப்பட்டுக்கு வழியில்ல
சாவே பரவாயில்ல...

-----------------------------

தாலிய கழட்டி வெச்சி வேண்டிக்கிட்டா
கட்டினவன் வந்துபுட்டேன்
கட்டினவள காணலியே
வாக்கரிசிக்கு வழியிருந்தா
உனக்கு சொல்லிவிடுறேன்
பொணத்தயாவது அனுப்பி வை
வாக்கரிசி நான் போட...!!

---------------------------------

யார் இவர்களுக்குப்
போர்வை கொடுக்க மாட்டேன் என்றது
இப்படி
மண்ணைப் போர்த்தித் தூங்குகிறார்கள்.....

-----------------------

முத்தெடுக்க
கடலுக்குள்ள குதிச்சிருக்கோம்!
இப்ப
எங்க முத்த
கடலுக்குள்ள தொலச்சினிக்கோம்!!
எந்தக்கரையில ஒதுங்கும்னு தெரியலயே
அறடி நெலமாவது கிடைக்குமா புரியலியே!!??

---------------------------

வறுமைக் கோட்டை அழிக்க முடியாமல்
கோட்டிற்கு கீழுள்ளவர்களை
அழித்துப் போனது கடல்!!!

-------------------------------

7 Comments:

Blogger J.S.ஞானசேகர் said...

சாவுக்குப் பயப்படாமல்
வாழ்ந்தவனின் வாழ்க்கையைச்
சாகடித்துப் போன
இயற்கையின் படுகொலை!

சாவுக்குப் பயந்தே
வாழ்ந்தவனின் வாழ்க்கையை
வாழவைத்துப் போன
இயற்கையின் தடுப்பு மருந்து!

சாவுக்கும் வேலையில்லை
கலியுலகான் வாழ்க்கையைச்
சந்தோஷங்களில் புதைத்துப்போன
இயற்கையின் எதார்த்தம்!

சாவுக்குக் காலமில்லை
கவலையற்றவன் வாழ்க்கையை
சற்றே நிறுத்தி நகரவைத்த
இயற்கையின் சிறுவிபத்து!

சாவுக்குத் தேதிகுறித்து
முடிவறியா வாழ்க்கையைக்
கூட்டிக் கழித்துக் கட்டம் போட்ட
இயற்கையின் இருபத்தியாறு!

சாவுக்குத் தயாராகும்
மூன்றாம் கோளின் வாழ்க்கையை
அடியில் ஆட்டிவைத்த
இயற்கையின் அறுவைச்சிகிச்சை!

-ஞானசேகர்

1:07 PM  
Blogger சேரல் said...

இந்தப்படைப்பை விமர்சனம் செய்து அசிங்கப்படுத்த விரும்பவில்லை!

1:12 PM  
Blogger கல்வெட்டு(பிரேம்) said...

சேரன் அவர்கள் தாராளமாக அசிங்கப்படுத்தலாம் அதில் ஒன்றும் தவறேயில்லை...ஆனால் விமர்சனத்திற்கும் அசிங்கப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.ஒருவேளை அசிங்கப்படுத்துவதுதான் அவருக்கு விமர்சனம் செய்வதாக இருக்கலாம்,அப்படியானால் அவருடைய பாசையில் தாராளமாக விமர்சனம் செய்யலாம்.

4:45 PM  
Blogger சேரல் said...

மன்னிக்கவும்! நான் சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்த ஆக்கத்தை விமர்சனம் செய்வதே கண்ணியம் அற்ற செயல் என்பது என் கருத்து. அதை வெளிப்படுத்தத்தான் அப்படி ஒரு பின்னூட்டமிட்டேன்.

5:25 PM  
Blogger J.S.ஞானசேகர் said...

ஏன் இப்புடி? இவ்விஷயத்தில், நான் சேரல் பக்கம்.

யூகி சேது சொன்ன ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது: "என்.எஃப்.உசேன், ஓர் மதக்கடவுளை நிர்வாணமாக வரைந்தார். உடனே, அம்மதக்காரர்கள், அவரை நிர்வாணமாக வரைந்தனர். உசேன் அவர்கள் 91 வயதிலும் கூட, அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை". எத்தனையோ பேர் அதே காரியத்தை, நூற்றாண்டு காலமாகச் செய்து வந்தாலும், உசேன் செய்தால்தான், தவறாகிப் போகிறது. ஒரே நிர்வாணம், வெவ்வேறு ஆட்களுக்கு, வெவ்வேறு அர்த்தம். உசேனின் அதே போக்கில், சேரலும் செல்லவேண்டும் என்பது எனது விருப்பம்.

உசேன் அமைதியாக இருப்பதைப் பார்த்த சிலர், அவர் மேல் வழக்கெல்லாம் போட்டு சீண்டினார்கள். அப்படி சேரன் சீண்டப்பட்டால், சேகருக்கும் ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள், கல்வெட்டு அவர்களே.

-ஞானசேகர்

6:36 PM  
Blogger J.S.ஞானசேகர் said...

எம்.எஃப்.உசேன் தான். எழுத்து பிழையாகி விட்டது.

-ஞானசேகர்

12:33 PM  
Blogger MaYa said...

உணர்ச்சிப்பெருக்கின் சுனாமி
உயிராழம் குடிக்குதையா..!!

நின் எழுத்துளியால் என்
இதயத்திரை - கல்வெட்டு..!

9:57 AM  

Post a Comment

<< Home