Wednesday, June 04, 2008

காதலி Wanted


அவசர அவசரமாக
எனக்கொரு
காதலி தேவைப்படுகிறது.

பாதியாய் மறைக்கப்பட்ட
மார்பகங்களும்
பாதிக்கும் குறைவாய்
மறைக்கப்பட்ட உடல்களும்
கலவரப்படுத்திப் போகிறது
என் ஹார்மோன்களை

சில முத்தங்களும்
சில சத்தங்களும்
தனித்திருப்பதற்கான
தண்டனையாய் படுகிறது



online'ல் பார்க்கும் ஒவ்வொரு
நொடியும் பேசத்துடிக்கிறது
மனது
பேசாமல் விட்ட விசயங்களும்
பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்
அழுத்திப்போகிறது மனதை

மீறி
பேசியவைகள் எல்லாம்
சச்சரவுகளில் முடிந்தது
பேசாதவைகள் எல்லாம்
கற்பனைகள் என ஒளிந்து
கொண்டது

அவ்வப்போது எழுதியாகிவிட்டது
உனக்கான காதலையும்
எனக்கான வலிகளையும்

போதும் வா
கிளம்பி வா
வந்து தணித்துப் போ எல்லாவற்றையும்
என் காதலியாய்

பின்குறிப்பு:
தேர்வுகள் இருப்பதால் june23'க்கு அப்புறம் கிளம்பி வரவும்

- பிரேம்
Posted by Picasa

Monday, July 30, 2007

மொக்கை

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறேன் அவனை...வெகு நாட்களாக
எழுதவில்லை..காயப்படவில்லை...கண்ணீர் சுரப்பைகள் கூட வற்றிவிட்டதாகவே
உணர்கிறேன்..கடைசியாய் அனுமதிக்கப்படுமுன் அவன் முனங்கியவைகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.ஞானசேகர் மொழியில் சொல்வதென்றால் "மொக்கை" என்றாலும் வேறு வழியில்லாமல் பதிவு செய்கிறேன்.இதுவே அவனுடைய கடைசியாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.மீண்டுவிடுவான் என்ற நம்பிக்கையில்.....

**************************
யார் யாருக்கெல்லாமோ
உனை பிடித்திருப்பதாய்
சொல்லிக் கொண்டிருக்கிறாய்

உனக்கு பிடித்திருக்கிறதா
எனக் கேட்பதாகவே படுகிறது எனக்கு.
****************************
இன்னும் எத்தனை வருடங்கள் தான்
பார்க்காமல் இருப்பது

ஒருமுறைதான் வந்து
பார்த்துவிட்டு போயேன்
பத்திரமாய் இருக்கிறதா
உன் நினைவுகள் என்று.
***************************************************

பைக்கில்
கொஞ்சம் நெருங்கி தான்
உட்காரேன்
பார்த்துத்தான் விடுவோம்
எவ்வளவு தான் துளைக்கிறதென்று

*****************************************

Monday, October 16, 2006

எழுதாத கவிதை

 

கிறுக்கலாய் படுகிறது
எல்லாமே
தோளில் சாய்ந்தபடி
நெஞ்சில் நீ எழுதிய
கவிதைக்கு பிறகு
---------------------------
யாரையோ தேடுவதாய்
தேடிப் பிடிக்கின்றன உன் விழிகள்
நான் பார்ப்பதை
---------------------------
உன் பாரங்களோடு
என் மீது சாய்கிறாய்
மிதக்கிறேன் நான்
---------------------------
பார்க்காத தருணத்தில்
பார்த்துவிட படபடக்கிறது
உன் கண்கள்

உன் பார்வையை
கவ்விவிட காத்திருக்கிறது
என் கண்கள்

இரண்டிற்குமாய்
ஏங்கித் துடிக்கிறது என் இதயம்
--------------------------
யாருக்கும் தெரியாமல்
சந்தித்துக் கொண்ட நம் பார்வைகளை
காட்டிக்கொடுக்கிறது
உன் வெட்கம்
------------------------- Posted by Picasa

Tuesday, September 19, 2006

அரசியல்

 

அடியே இந்திரா
நம்ம பொழப்பே நாத்தம் புடிச்ச
பொழப்பா இருக்கு
இதுல இவுக கூத்தக் கேட்டியா!?

சாதிக்க பொறந்தவுக
சாதியவச்சி பிரிச்சிடாதிகன்றாக
அப்படியே
சாக்கடைய அள்ள
அவுக சாதிக்காரவிய எப்ப வாராகன்னு
கேட்டு சொல்லலாமுல்ல

கால் வயித்து கஞ்சிக்கு
வழியில்லனாலும்
மந்திரம் சொல்லி சம்மதிப்பாக
மலம் அள்ள சம்மதிப்பானுவலா

அடியே நீ எதாவது ஆக்கினியா
அரிச்சி அரிச்சி பாத்தாலும்
ஒன்னும் அகப்படலியடி
முந்தா நேத்து வச்ச கஞ்சியில
பருக்ககூட மிஞ்சலயடி

வருசத்துல பாதி நாலு
பட்டினியா கெடந்தாலும்
கேக்க ஒரு நாதியில்ல
ஏதோ
மூணு வேள சாப்பிடலியாம்
மிகப்பெரிய போராட்டமுன்னு
போஸ் கொடுக்குறானுக

எடுபட்ட பயலுக
இத வேற போட்டு போட்டு
காட்டுறானுக
படப்பொட்டியில

இதெல்லாம் காணாதுன்னா
தலித் எழுத்தாளர்ன்னு சொல்றான்
என்னயும் சேத்துக்கன்றானுங்க
அதுசரி
எந்த கக்கூச
எப்ப கழுவ வர்றானுங்கன்னு
எழுதினா நல்லாயிருக்கும்

சரி நமக்கெதுக்கு இதெல்லாம்
வா நம்ம
நம்ம பொழப்ப பாப்போம் Posted by Picasa

Monday, June 26, 2006

 

கவலைகள் செத்துப்போன அன்று
யார் யாரோ
அழுவதாக கற்பனைசெய்கிறேன்
ஏமாற்றிவிடாதீர்கள்
வாடகைக்காவது பிடித்துவாருங்கள்
அப்படியே
உங்களுக்காக சிரிப்பதற்கும். Posted by Picasa

Tuesday, May 30, 2006

தோழி...

  Posted by Picasa

* என் மனதில்
பதட்டத்தில் நிழல் படிந்திருந்த
ஒரு
அழகான தினத்தில்
நீ அறிமுகப்படுத்தப்பட்டாய்.

* பார்க்காமல் விட்டுவிட்டேன்
ஒருவேளை நடந்திருக்கலாம்
மனதை வருடும் மழையோ
இல்லை
வானில் நட்சத்திரமோ
எதோவொன்று உணர்த்திப்போயிருக்கலாம்
எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை

* என் முகம் சத்தமாகவும்
வார்த்தைகள் ரகசியமாகவும்
சொல்லிப் போகின்றன
என் வலிகளை
உன்னிடம்

* வேதனையின் போது.
சாரலில் எழும்
மண்வாசனை போல்
இதமாய் இருக்கிறது
உன்
நட்பின் வார்த்தைகள்

* என் உள்ளங்கையில்
விழுந்த கண்ணீரில்
தெரிகிறது
உன் நட்பின்
பிம்பம்..

* சந்தோசமாய்
உன் விரல் பிடித்து
சிறுகுழந்தை போல
விளையாடிக்கொண்டே நடக்கிறது
மனது
அருகருகே
நடந்துகொண்டிருக்கிறோம் நாம்

if i leave will u miss me??

* இல்லை என்றால்
நம்பிவிடவும் ஆமாம்
என்றால்
ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்...

ஆனால் தயவு செய்து
பிரியும் போது
கொஞ்சம்
வலிக்காமல் தான்
பிரிந்து போயேன்
பயமாய் இருக்கிறது...

- பிரேம்

Thursday, May 11, 2006

ஆசையின் ஏக்கம்

  Posted by Picasa

அன்புள்ள ..... ,
ஞாபகமிருக்குமென்றே
நினைக்கிறேன்
என் பெயர் உனக்கு..

வழக்கமான தொடக்கம்தான்
இருந்தும் அறிந்தே இருக்கிறேன்
சத்தமாய் உச்சரிக்க சத்தமில்லாமல்
ஏங்கும் உன் மனதை

மழைபெய்து ஓய்ந்த
மாலைநேர தேநீர் போல
இனம்புரியாத இதமாக இருக்கிறது
உன் நினைவுகள்

இருபத்தி இரண்டு வருடங்கள்.

பேருந்து பயணம் போல
கடந்துவிட்டது வாழ்க்கை
இதில் நான்கு வருடங்கள்
உன் தோள் சாய்ந்து...

தெரிந்தும் தெரியாமலும்
தோள்வாங்க நினைத்து
விழுந்து காயப்படுகிறேன்
இப்போதெல்லாம்

காயங்களை நினைத்து
நானே சிரித்துக் கொள்கிறேன்
எல்லோருடன் சேர்ந்து...

ஆனாலும்
இன்னும் நினைவிருக்கிறது
மெதுவாய் புன்னகைத்து
தலையை திருப்பி
நீ
கண்களை துடைத்துக் கொண்டதை

அது எனக்காக
என்று சந்தோசமாய்
இருந்த தருணத்தில் தான்
நடுத்தெருவில்
எனை கதறி அழவிட்டு
கைப்பிடித்து போகப்பட்டாய்

இன்றும்
உதடுகளை புன்னகைக்க விட்டு விட்டு
அழுது புரள்கிறது
மனது

ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அரவணைப்பின்
கதகதப்பில் கேட்கப்படும்
என் வேதனையின் முனங்களுக்காய்..
என் மூச்சுக்காற்று
முனங்கும் முன் வந்துவிடுவாய்
என்றே நினைக்கிறேன்.

இன்றும் அன்புடன்
பிரேம்