Friday, August 12, 2005

ஊமையாய் நான்.....

ஊமையாய் நான்.....


தோட்டத்துல மல்லிப்பூ பூத்திருந்தும்
தொடுத்து வைக்க முடியலயே!
வாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்
உன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே!

புற்றுநோய் எனத் தெரிந்திருந்தும்
பொட்டு வச்சு போனவனே
வியர்வையில குளிக்கையில் தெரியாமல்
போனதய்யா
கண்ணீரில் நீ நீந்தவைப்பன்னு.

கல்யாணச் சிரிப்பு அடங்குமுன்னே
சந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்க
பந்திக்கு இல போடுமுன்னே
பந்தி முடிஞ்சதேன்னு புரியலையே!

மஞ்சக் கயத்தில என் வாழ்க்கையை
தூக்கிலிட்டுப் போனவனே!
உயிர் போன பின்பு ஒப்பாரி வச்சவுக,
நீ போன காரணம் தெரிஞ்சிருந்தும்
நான் வந்த நேரமுன்னு சொல்லி
உயிரோட எரிக்கிறாக என்னை.

முழுகாம நான் இருக்குமுன்னே
மூழ்கிப் போனதய்யா என் வாழ்க்கை
கல்யாணத்துக்கு கட்டின வாழையின்னும்
கருகலையே!
என் வாழ்க்கை பட்டுப்போனதேன்னு
தெரியலையே

கைக்குள்ள அடங்காத உன் உடம்பு
சட்டிக்குள்ள அடங்கிப்போன மர்மமென்ன?
ஏத்திவச்ச குத்துவிளக்கு அணையலையே!
கொள்ளிக்கட்டைக்கு நெருப்பானதேன்னு
புரியலையே

பொட்டு வாங்க வச்சிருந்த ஒத்த ரூபா
பொட்டாகிப் போனதடா உன் நெத்தியில
கட்டியிருந்த சேல முழுசா கசங்கலையே!
'கோடி' சேலைக்கு என்ன அவசரமுன்னு தெரியலையே!

என் வாழ்க்க சின்னாபின்னமானதடா
உன் மரணச் சின்னமாகிப் போனேனடா
நடமாடும் கல்லறையாகிப் போனதாலோ என்னவோ
சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனேனடா!

கி.பிரேம் குமார்

2 Comments:

Blogger J S Gnanasekar said...

This comment has been removed by a blog administrator.

3:23 PM  
Blogger J S Gnanasekar said...

விதவை என்பவள் கணவனின் மரணச் சின்னம் என்றது சரியான கற்பனை.

ஆனால், கைம்பெண்(விதவை) என்பவள் சமூகத்தால் ஊமையாக்கப்படப் போகிறவள்; பேசுவதும், பேசாமல் போவதும் அவள் முடிவில். பூவை விட்டுத் தருவதும், பொட்டை விட்டுத் தருவதும் அவள் எதிர்ப்பில்.

வாழ்க்கைத்துணை என்பவன் (என்பவள்) தன் எதிர்கால வாழ்வைக் கட்ட சம்மதித்த ஒரு ஒப்பந்தக்காரன். அவனே வாழ்க்கையின் சொந்தக்காரன் என்பது அறிவீனம். ஒப்பந்தம் முறிந்து போனால், மறு ஒப்பந்தம் தேடுவதோ அல்லது ஒப்பந்தத்தொகை மிச்சம் என்று தானே மிச்சத்தையும் கட்டிமுடிப்பதோதான் புத்திசாலித்தனம்.

பெற்ற தாய்தந்தை இறந்தாலே சிலநாளில் மறந்து போகும் அற்ப ஜீவன்கள் நாம். இன்னொரு ஜீவனின் இறப்பில் தன் பிறப்பை அர்த்தமற்றதாக்குவது அறிவீனம்.

இதுபோன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துகள் பிரேம்குமார்.

3:41 PM  

Post a Comment

<< Home